×

3 நண்பர்களின் நட்பை சொல்லும் ஜிகிரி தோஸ்த்: பட ஹீரோ அறன் நெகிழ்ச்சி பேட்டி

சென்னை: மூன்று நண்பர்களின் கதையாக உருவாகியுள்ளது ஜிகிரி தோஸ்த் படம். இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருப்பதுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறன். அவர் கூறியதாவது: சிவில் இன்ஜினியரிங் படிக்கும்போதே நல்லவரா கெட்டவரா என்ற குறும்படத்தை இயக்கினேன். அந்த படத்தை பார்த்துவிட்டு டைரக்டர் ஷங்கர் என்னை அழைத்து வாய்ப்பு தந்தார். அவர் இயக்கிய 2.0 படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அப்போது ரஜினி சாருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த நேரத்தில் திறந்த புத்தகம் என்ற குறும்படத்தில் ஹீரோவாக நடித்து இயக்கினேன். அந்த குறும்படத்தை பார்த்த ரஜினி சார், உங்களுக்கு நடிப்பு நன்றாக வருகிறது. சினிமாவுக்கு முயற்சி செய்யலாமே என்றார். நண்பர்களும் இதையே சொன்னார்கள். அந்த சமயத்தில் இந்த குறும்படத்துக்காக சைமா விருது வாங்கினேன். அதுவும் சிறந்த நடிகருக்கான விருது. அப்போதுதான் என்னிடம் இருந்த இன்னொரு திறமையும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து அடுத்தடுத்து 10 குறும்படங்களை இயக்கினேன். நான் இயக்கி, நடித்த மேகம் செல்லும் தூரம் குறும்படத்தை பார்த்துவிட்டு, கோவையை சேர்ந்த தொழிலதிபர் பிரதீப் ஜோஷ் தொடர்புகொண்டார். படம் தயாரிக்க இருப்பதாகவும் அதற்காக நல்ல கதை வேண்டும் என்றார்.

இதையடுத்துதான் எனது முதல் திரைப்படமான ஜிகிரி தோஸ்த் பட வேலைகள் தொடங்கியது. இந்த படத்தை லார்ட்ஸ் பி இன்டர்நேஷனல் சார்பில் பிரதீப் ஜோஷுடன் சேர்ந்து எனது விவிகே என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. எஸ்பி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எஸ்.பி.அர்ஜுனர் இணை தயாரிப்பு செய்கிறார். இதில் நான், நடிகர் ரியாஸ்கானின் மகன் ஷாரிக் ஹாசன், விஜே ஆஷிக் ஆகியோர் நண்பர்களாக நடிக்கிறோம். 3 பேரும் மகாபலிபுரத்துக்கு போகிறோம். அப்போது வழியில் ஒரு இளம்பெண் கடத்தப்படுவதை பார்க்கிறோம்.

அவரை காப்பாற்ற நானும் ஷாரிக்கும் முடிவு செய்கிறோம். ஆனால் நமக்கு எதற்கு பிரச்னை என எங்கள் முடிவுக்கு எதிராக இருக்கிறார் ஆஷிக். இந்த சமயத்தில் நான் கண்டுபிடித்த ஒரு தொழில்நுட்பத்தை வைத்து அந்த பெண்ணை காப்பாற்ற முயல்கிறோம். இதன் விளைவுகளை படம் சொல்லும். நண்பர்களின் வாழ்க்கை நட்பால் அழகாகிறது என்பதை சொல்லும் படமிது. இதில் அம்மு அபிராமி, பவித்ரா லட்சுமி, கவுதம் சுந்தர்ராஜன், அனுபமா குமார், மதுமிதா, ஷரத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அஷ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் விரைவில் தியேட்டர்களில் ரிலீசாகிறது.

The post 3 நண்பர்களின் நட்பை சொல்லும் ஜிகிரி தோஸ்த்: பட ஹீரோ அறன் நெகிழ்ச்சி பேட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Zhigiri Dost ,Ahan Resilience ,Chennai ,Ahan ,Achan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...